டி20 உலகக் கோப்பை தொடரின் உச்சக்கட்டமான இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மகுடத்திற்காக மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்னதாகப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர், இறுதிப் போட்டி சவாலாக இருக்கும் என்றாலும் கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே தங்கள் இலக்கு என்றும், கோப்பையை வெல்ல இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைக்கத் தயாராக இருப்பதாகவும் அதிரடியாகக் கூறினார். சாண்ட்னரின் இந்த கருத்திற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பாணியில் நறுக்கென பதிலடி கொடுத்துள்ளார். சாண்ட்னரின் பேச்சை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத சூர்யகுமார், “எல்லாரும் இதே வரியையே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? புதிதாக ஏதாவது சொல்லுங்கள்” என கிண்டலாகப் பதிலளித்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முன்பு ஒருமுறை கூறிய அதே பாணியில் சாண்ட்னர் பேசியதைச் சுட்டிக்காட்டி சூர்யகுமார் கொடுத்த இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.