சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு 34 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கானூர் பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தன்னை நெருங்குவதைக் கண்ட ஊர்க்காவலன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததுடன் தன்னை பிடிக்க வந்த காவலர்களைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தற்காப்புக்காகக் காவல்துறையினர் தங்களது துப்பாக்கியால் ஊர்க்காவலனின் காலில் சுட்டு அவரை நிலைகுலையச் செய்து கைது செய்தனர். காயமடைந்த அந்த நபர் பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இது குறித்து உயர்மட்டக் காவல் அதிகாரிகள் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.