மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. இதனிடையே நாட்டில் போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்த போதிலும் நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இதுவரை 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 114 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 2,043 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 868 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்து 928 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. சர்வதேசச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
