“கரூர் சம்பவத்தில் நடந்த தவற்றுக்கு பொறுப்பேற்று நடிகர் விஜய் மக்களிடம் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற ‘டெக்ஸா’ திரைப்படத் தொடக்க விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயற்றும் சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஒரு தனி நபரான ஆளுநருக்கு வழங்கப்படுவது முறையல்ல. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தற்போது மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பது, அங்கேயும் தொல்லை கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலங்கள் தமிழக நிலங்களை மெல்ல ஆக்கிரமித்து வருகின்றன. மரங்களில் குறியீடுகள் இடுவது, வனப்பகுதிகளை விரிவாக்கம் செய்வது எனத் தமிழகத்தின் எல்லைகள் சுருக்கப்படுகின்றன. நமது வளங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழகத்தைக் குப்பை மேடாக மாற்றும் செயல்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கரூர் சம்பவத்தில் தவெகவினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, “ஒரு தவறை ஏற்றுக்கொண்டு அதைத் திருத்திக்கொள்வதே மாண்பு. கரூர் சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் கூறுகிறார். ஆனால், அவர் வராவிட்டால் அங்கே கூட்டம் கூடியிருக்காது; கூட்ட நெரிசலில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. ‘தெரியாமல் ஒரு தவறு நடந்துவிட்டது, அதற்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். கரூரில் மட்டுமல்ல, அவரது முதல் மாநாட்டிலேயே மரணம் நிகழ்ந்துவிட்டதை அவர் உணர வேண்டும்” என்றார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றமில்லை. என்னோடு யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். வாக்குக்குக் காசு கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி பற்றிச் சிந்திக்க முடியும். காசு கொடுத்துப் பெறும் வெற்றி என்பது இழிவான அரசியல்.

தமிழகத்தில் போதைப் பழக்கம் மற்றும் மதுவின் தாக்கம் காரணமாகக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலையாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாகக் கிடைக்காததே குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசால் மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியாது என்று சீமான் குற்றம் சாட்டினார்.