பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பீகார் சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின் போது மாநில துணை முதலமைச்சர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் உடனிருந்தனர். பத்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமைக்குரிய நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிதிஷ்குமாரின் இந்த அரசியல் மாற்றம் குறித்து விமர்சித்துள்ள மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ நானா படோலே பாரதிய ஜனதா கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றும் குணம் கொண்டது என்று சாடியுள்ளார்.
நிதிஷ்குமாரின் நிலையை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர் கடந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றும் அவர் முதலமைச்சர் ஆக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோல் பீகாரிலும் நிதிஷ்குமார் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு தற்போது அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நானா படோலே குற்றம் சாட்டியுள்ளார். கடந்த தேர்தலில் பீகாரில் பெரும் பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரான நிலையில் தற்போது அவர் மாநிலங்களவைக்குச் செல்ல வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
