பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, அங்கு அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளது. நிதிஷ் குமாருக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே அடுத்த முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி வெற்றி பெற்று, நிதிஷ் குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், வெறும் 3 மாதங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் பீகாரில் நிதிஷ் குமார் சகாப்தம் முடிவுக்கு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பீகாரில் ஜாதி ரீதியிலான வாக்கு வங்கிகளைக் கருத்தில் கொண்டு, முதல்வர் பதவிக்கு பாஜக மூன்று பெயர்களைப் பரிசீலித்து வருகிறது:
அதன்படி சாம்ராட் சௌத்ரி தற்போதைய துணை முதல்வரான இவர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்தவர். நிதிஷ் குமாருக்குப் போட்டியாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல் தேர்வாக்கியுள்ளது.
அடுத்தது நித்யானந்த ராய்: மத்திய அமைச்சராக இருக்கும் இவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முன்னிறுத்துவது பாஜகவின் தேர்தல் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திலிப் ஜெய்ஸ்வால்: தற்போதைய அமைச்சரவையில் உள்ள இவர் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தின் பிரதிநிதியாக இவர் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
மற்றொரு துணை முதல்வரான விஜய் குமார் சின்ஹா, ஆதிக்க சாதியாகக் கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பின்தங்கிய வகுப்பினரின் வாக்குகளைக் கவர அவரை முதல்வர் பதவிக்குப் பரிசீலிக்க வாய்ப்புக் குறைவு என்றே கூறப்படுகிறது.
மேலும் மகாராஷ்டிராவைப் போலவே, பீகாரிலும் கூட்டணிக் கணக்குகளைச் சரியாகப் பயன்படுத்தி, மாநிலக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்சி அதிகாரத்தைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், புதிய முதலமைச்சர் வேட்பாளரை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
