தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 26,000 பணியாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு முதல் ஓராண்டு வரை வழங்கப்படும் தொகுப்பூதியம் ( பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி
விற்பனையாளர்கள் (Salesmen): மாதம் ரூ. 7,500.
கட்டுநர்கள் (Packers): மாதம் ரூ. 6,600.
ஓராண்டு காலப் பணியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, புதிய ஊதியக் கற்றையில் (Pay Scale) காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர்கள்: ரூ. 9,900 முதல் ரூ. 39,600 வரை. கட்டுநர்கள்: ரூ. 9,000 முதல் ரூ. 35,000 வரை.
பணியாளர்களின் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து பல்வேறு படிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது அடிப்படை ஊதியத்தில் 55% அகவிலைப்படியாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு ஊதிய உயர்வு தற்போது நடைமுறையில் உள்ள 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
வீட்டு வாடகைப்படி அடிப்படை ஊதியத்தில் 10% அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்கு ஏற்ப ரூ. 1,500 வரை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைப்படி கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விற்பனையாளர்களுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரையிலும், கட்டுநர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரையிலும் படி வழங்கப்படும். மருத்துவப்படியாக மாதம் ரூ. 300 வழங்கப்படும்.
நகர ஈட்டுப்படி மற்றும் மலைவாழ்/குளிர்காலப்படி: தகுதியான இடங்களுக்கு ஏற்ப 4% முதல் 5% வரை ஈட்டுப்படியும், மலைப் பகுதிகளில் 20% வரை மலைவாழ் படியும் வழங்கப்படவுள்ளது.
ஒரே பதவியில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குத் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய உயர்வு (தலா 3%) வழங்கவும் அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் (அ.சா.கு.எண். 1055/சி41/2026, நாள்: 05.03.2026) வெளியிடப்பட்டுள்ள இந்த ஆணை, அரசாணை வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அரசுச் செயலாளர் கே.ஏ. பழனிசாமிதெரிவித்துள்ளார்.
