மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் உயர்தர பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியா ஏற்றுமதி செய்யும் பாஸ்மதி அரிசியில் சுமார் எழுபத்தி இரண்டு சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கிறது.
குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அறுபத்தி ஏழு சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. தற்போது கடல் வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிப்பால் சுமார் நான்கு லட்சம் மெட்ரிக் டன் அரிசி துறைமுகங்களிலும் கப்பல்களிலும் தேக்கமடைந்துள்ளது.
இதனால் ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் பணம் முடங்கியுள்ளதோடு புதிய வர்த்தக ஒப்பந்தங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடர் பாதிப்பு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதோடு காப்பீட்டு நிறுவனங்களும் போர்ப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களுக்குக் காப்பீடு வழங்க மறுத்து வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்த ஈரானின் இறக்குமதித் திறன் தற்போது பொருளாதார நெருக்கடியால் பாதியாகக் குறைந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த விவசாய ஏற்றுமதியில் இருபது சதவீதப் பங்கைக் கொண்டுள்ள பாஸ்மதி அரிசி வர்த்தகம் முடங்கினால் உள்நாட்டுச் சந்தையில் அதன் விலை குறைந்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு ஏற்றுமதியாளர்களுக்கு உரிய நிதிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
