திமுகவின் முக்கியப் புள்ளிகளும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகளுமான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி ஆகியோர் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது ஈரோடு மாவட்டத்திலும் திமுகவுக்கு ஒரு பேரிடி விழுந்துள்ளது. அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவரும், அழகிரி பேரவையின் ஈரோடு மாவட்டத் தலைவருமான சுகுணா சத்தியன், திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இது ஈரோடு மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரிக்கு ‘வலது கை’ போலச் செயல்பட்டு வந்த சுகுணா சத்தியன், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் சென்னை சென்று இபிஎஸ்ஸை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் கொத்து கொத்தாக அதிமுகவுக்குத் தாவுவது திமுக தலைமைக்கு ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்திலும் அழகிரி விசுவாசிகள் அதிமுக பக்கம் சாய்வது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
