பெங்களூருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மீனால் கோயல் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ராஜேஷ் எதிர்கொண்ட துயரமான நிதி நெருக்கடி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வேலையிழந்த ராஜேஷ் தொடர்ந்து மூன்று மாதங்கள் வங்கித் தவணைகளைச் செலுத்தத் தவறியதால் வங்கி நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் விளைவாக அவர் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீடு வெறும் தொண்ணூற்றைந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. எட்டு ஆண்டுகளாகத் தவணை செலுத்தி வந்த போதிலும் வீட்டை ஏலம் விட்ட பிறகு வங்கி தனது பாக்கித் தொகையான எண்பது லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதினைந்து லட்சம் ரூபாயை மட்டுமே ராஜேஷிடம் வழங்கியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மீனால் கோயல் வங்கிக் கடனை முழுமையாக அடைக்கும் வரை அந்த வீடு நமக்குச் சொந்தமானதல்ல என்றும் நாம் வங்கிக்கு வாடகை செலுத்தித் தங்குவது போன்ற நிலையே நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத வேலையிழப்பு ஒருவரின் 8 ஆண்டு கால உழைப்பையும் சேமிப்பையும் எவ்வாறு சீர்குலைக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற இக்கட்டான சூழல்களைத் தவிர்க்க அவசர கால நிதி எப்போதும் கைவசம் இருக்க வேண்டும் என்றும் தவணை செலுத்த முடியாத நிலையில் வங்கி அதிகாரிகளை அணுகி கடனை மறுசீரமைப்பு செய்ய முயல வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இருப்பினும் இவ்வளவு குறுகிய காலத்தில் வீட்டை ஏலம் விட முடியாது என்று சமூக வலைதளங்களில் சிலர் இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.