உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், 62 வயது முதியவரை அவரது மனைவியே பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு தப்பியோடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பதி (62). இவரது மனைவி சுமித்ரா. இவர்களது திருமணம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்கள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். ராம்பதி கூலித் தொழிலாளி.

செவ்வாய்க்கிழமை காலை, ராம்பதி தனது அறையில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமித்ரா, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராம்பதி மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். ராம்பதி அலறியதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், சுமித்ரா அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

வீட்டிலிருந்து கரும்புகை வருவதைக் கண்ட கிராமத் தலைவர் சோட்டேலால், உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு ராம்பதி உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். தீப்பற்றியதும் அவர் தப்பிக்க முயன்றார் என்பதும், ஆனால் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால் அவர் அறையிலேயே துடிதுடித்து உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சுமித்ரா குறித்து போலீசார் கூறுகையில், “கடந்த செப்டம்பர் 2023-ல் இதேபோல் தனது கணவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் சுமித்ரா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் கணவருடன் வசித்து வந்துள்ளார். தற்போது திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளார்,” எனத் தெரிவித்தனர்.

தப்பியோடிய சுமித்ராவை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து அறையின் சாவியைப் பறிமுதல் செய்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். மேலும் கணவனை எதற்காக அவர்களை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.