தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “நான் எதைப் பேசினாலும் சிலர் திட்டமிட்டே அதைத் திரித்துப் பேசுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் திமுக ஒரு ‘தீய சக்தி’ என்பதைச் சிறு குழந்தைகள் கூடச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் என்று சாடினார்.
மேலும், விளையாட்டுத் துறையை உதாரணமாகக் காட்டிப் பேசிய அவர், கிரிக்கெட்டில் டெல்லி அணியால் தமிழ்நாடு அணியைத் தொடக்கூட முடியாது என்றும், வரும் தேர்தலில் தமிழக மக்கள் தவெக-விற்குத்தான் ‘விசில்’ போடுவார்கள் என்றும், தவெக-வே தமிழ்நாடு, தமிழ்நாடே தவெக என்ற நிலை உருவாகும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதனால் விவசாயிகளின் நலன் குறித்துப் பேசிய விஜய், தான் அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கவே ஆசைப்படுவதாக உருக்கமாகக் குறிப்பிட்டார். “மற்றவர்களைப் போல நான் ‘டெல்டா காரன்’ என்று சொல்லி உங்கள் காதில் டால்டா ஊற்ற விரும்பவில்லை ஆனால் விவசாயிகளின் வலியை நான் நன்கு அறிவேன்” என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்கினார்.
இந்நிலையில் விவசாயிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததும், மணல் மாஃபியாக்களுக்குத் துணையாக இருப்பதும் இந்த திமுக அரசுதான் என்று குற்றம் சாட்டிய அவர், வரப்போகும் தேர்தலில் ‘வீட்டுக்கு வீடு விஜய்’ என்பது 100 சதவீதம் நிரூபிக்கப்படும் எனத் தொண்டர்களிடையே ஆக்ரோஷமாகப் பேசினார்.
