திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார். தவெக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது குறித்து அந்த கட்சியினரிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, அது சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கே தெரியும் என்று சுருக்கமாகக் கூறினார்.தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளதாக முதலமைச்சர் கூறிய கருத்தை கடுமையாக விமர்சித்த அவர், மாநிலத்தின் இன்றைய நிலை மிகவும் மோசம் என்று குற்றம் சாட்டினார்.

மாணவர்கள் கையில் புத்தகங்களுக்குப் பதில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது மட்டுமே என்றும், பண பலம் மற்றும் அதிகார பலத்தைவிட மக்களின் பலமே இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.