ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்ற நீதிபதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நான்கு போலி தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்டி மனுவை நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையில் பிழை இருப்பதாகத் தொடரப்பட்ட புகாரை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியதாகக் கூறி நான்கு தீர்ப்புகளை அந்த நீதிபதி மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால் அந்தத் தீர்ப்புகள் உண்மையில் வழங்கப்பட்டவை அல்ல என்பதும் அவை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என்பதும் பின்னர் கண்டறியப்பட்டது.

இது குறித்து உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததோடு நிறுத்திக் கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அமர்வு போலித் தீர்ப்புகளின் அடிப்படையில் முடிவெடுப்பது நீதித்துறை விதிகளுக்கு எதிரானது என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இது வெறும் சட்டத் தவறு மட்டுமல்லாமல் முறையற்ற நடத்தை என்றும் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க இந்திய அட்டர்னி ஜெனரல் மற்றும் இந்திய பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வரும் மார்ச் பத்தாம் தேதி வரை அந்தப் போலி தீர்ப்புகளின் அடிப்படையில் பெறப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.