பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகளவில் இவ்வளவு அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் மற்றும் ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ போன்ற உலகத் தலைவர்களை விட பல மடங்கு கூடுதலான சந்தாதாரர்களுடன் மோடி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரதமரின் உரைகள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் அவரது யூடியூப் சேனல் வாயிலாக மக்களிடம் நேரடியாகச் சென்றடைவது இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராம் தளத்திலும் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பிரதமரின் அணுகுமுறைக்கு இந்த புதிய மைல்கல் ஒரு சான்றாக அமைந்துள்ளது.