டி20 உலகக் கோப்பை (2026) தொடரின் மிக முக்கியமான சூப்பர்-8 ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், விராட் கோலியின் நீண்டகால சாதனை ஒன்றைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்துள்ளார்.
காலிறுதிக்கு இணையான இந்த ஆட்டத்தில், 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணிக்குச் சஞ்சு சாம்சன் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். அவர் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதற்கு முன்பு, டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும்போது இந்திய வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 82 ரன்களாக இருந்தது. விராட் கோலி 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2022-ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தலா 82* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 97* ரன்கள் எடுத்ததன் மூலம் அந்தச் சாதனையைச் சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.
கடந்த 2016 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தியாவின் இந்த வெற்றி அமைந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன் பார்ம் அவுட்டில் இருந்த சாம்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெற்றி ரன்னை அடித்தவுடன், சாம்சன் மைதானத்தில் அமர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்த காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வரும் மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது
