தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேநேரம், அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகப் பயணத்திற்குப் பிறகு, இந்தப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற்ற என்.டி.ஏ கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்தது கூட்டணியின் வலிமையைக் காட்டுவதாக அமைந்தது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

அதிமுக: தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை உறுதி செய்வதில் அதிமுக உறுதியாக உள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் தாங்களே போட்டியிட அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

பாஜக கடந்த 2024 மக்களவைத் தேர்தல் வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 50 இடங்களைக் கோர உள்ளதாகவும், குறைந்தபட்சம் 35 இடங்களுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் தரப்பில் 15 இடங்கள் கோரப்பட்டுள்ளன. குறிப்பாகத் தென் தமிழகத்தில் 10 இடங்களைக் கைப்பற்ற அவர் முனைப்பு காட்டி வருகிறார். அவர் அதிமுக தலைமையுடன் நேரடியாகப் பேச விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, இரட்டை இலக்க எண்ணிக்கையில் (குறைந்தது 10 இடங்கள்) போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகம் ஆகியவை தலா 2 இடங்களைக் கோரியுள்ளன. இவர்கள் பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதவிர புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது.

பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது. மதுரையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக இதுவரை தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அறிவிக்காத நிலையில், வரும் நாட்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.