தலைநகர் டெல்லியின் அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முன்ஜன் கேவாட் என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாகத் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்த கேவாட் பலரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில் கடனைத் திருப்பிக் கேட்க வந்தவர்களின் நெருக்கடியால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று தனது மனைவி அனிதா மற்றும் 5,4,3 வயதுடைய மூன்று குழந்தைகளையும் கழுத்தறுத்துக் கொலை செய்த அவர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கேவாட்டைத் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மறைந்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பமே சூதாட்டத்தினால் அழிந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.