சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டாவது முறையாகத் தமிழகம் வரும் பிரதமர் மோடி, இன்று மாலை மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் தோன்றி உரையாற்ற உள்ளனர்.

முன்னதாக இன்று காலை புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 2.45 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மோடியின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.