தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு முறை பெரும் வெற்றி பெற்ற கனிமொழி, இம்முறை திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் களம் காண உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்செந்தூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனது உடல்நிலையைக் காரணம்காட்டி இம்முறை போட்டியிடப் போவதில்லை எனத் தலைமைக்குத் தெரிவித்துள்ளதால், கனிமொழிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு கனிமொழி அளித்த மௌனமான பதில், அவர் திருச்செந்தூரில் போட்டியிடுவதை ஏறக்குறைய உறுதிப்படுத்தியுள்ளது. ஒருவேளை கனிமொழி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால், அவருக்கு மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.