தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் – சங்கீதா தம்பதியின் விவாகரத்து விவகாரம் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாகத் திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
“நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்த மனுஷனைப் பிரச்சினைகளில் மாட்டி விடுகிறார்கள்” என நடிகை சசிலயா ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் நடைபெற்ற செப்டம்பர் 27-க்கு பிறகு, ஒவ்வொரு மாதம் 27-ம் தேதியும் ஒரு சம்பவம் நடப்பது போல, தற்போது விவாகரத்து செய்தி பிப்ரவரி 27-ல் வந்துள்ளது எனச் சந்தேகம் கிளப்பிய அவர், தனிப்பட்ட விஷயத்தைத் தேர்தல் நேரத்தில் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீரியல் நடிகர் அருண் ராஜன் வெளியிட்டுள்ள வீடியோவில், “எல்லாவற்றையும் விட்டு விட்டு மக்களுக்காக வர நினைத்த விஜயை, கொஞ்சமாவது இடைவெளி விட்டு தாக்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜயை ஊரே அன்பு செலுத்தும் வேளையில், இவ்வளவு ஆண்டுகள் கழித்துத் தேர்தல் நேரத்தில் சங்கீதா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் நெருங்கிய நண்பரான தாடி பாலாஜியும், “எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது. கலங்காதே நண்பா, உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்” என இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
