உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா குப்தா குடும்பத்தினர், விமான நிலையத்தில் தவறிவிட்ட தங்கள் சாமான்களைத் திரும்பப் பெற முயன்றபோது 1.63 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்துள்ளனர். சாமான்களை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்க வெறும் 5 ரூபாய் மட்டும் டெலிவரி கட்டணமாகச் செலுத்தும்படி கூகுளில் கிடைத்த ஒரு போலி எண் மூலம் சைபர் குற்றவாளிகள் ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பி அரவிந்தின் மனைவி ஷாலினி குப்தா தனது மொபைல் மூலம் 5 ரூபாயை யுபிஐ (UPI) செயலி வழியாக அனுப்பியுள்ளார்.
பணம் வந்து சேரவில்லை என மர்ம நபர்கள் கூறியதால், அரவிந்தின் மொபைல் மூலமும் மீண்டும் 5 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே இவர்களது இரண்டு செல்போன்களும் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் 1.63 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. கூகுளில் இருக்கும் போலி எண்களை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தச் சம்பவம் பொதுமக்களுக்குப் பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
