முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வம் (OPS) அணியின் முக்கிய ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜன், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.

முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் சேரக்கூடும் என்று இன்று காலை முதல் அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் நிலவின.

திமுகவில் இணைவது குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெல்லமண்டி நடராஜன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு, திமுகவில் சேர மனம் இடம் தரவில்லை” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உணர்வின் அடிப்படையில், அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். மேலும் கட்சியில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார். ஓபிஎஸ் அணியிலிருந்து மூத்த நிர்வாகிகள் விலகி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைவது அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.