தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ‘செயல் வீரர்கள்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு தொகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
பூத் கமிட்டி எனப்படும் வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும். தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இணை கண்காணிப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே இந்தக் கூட்டத்தில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், களப்பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் இந்தச் செயல் வீரர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
