தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சியார்கோயில் அருகே உள்ள கூகூர் நல்லாடை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, அங்கு சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜ மனோகர் என்பவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இது குறிப்பாக, பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு மாலை நேரத்தில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளின் போது, அந்த ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனால் முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கல்வி கற்கச் செல்லும் இடத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
