தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது மக்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்புப் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ள நிலையில், அடுத்ததாகத் தஞ்சாவூரில் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் இரண்டாம் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ள இந்தக் கூட்டத்திற்காக, தவெக நிர்வாகிகள் விரைவில் காவல்துறையிடம் அனுமதி கோர உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தற்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழகம் முழுவதும் குறைந்தது மூன்று பெரிய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
டெல்டா மாவட்டமான தஞ்சையைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாகத் தென் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
இது பொதுமக்களுக்கான மாபெரும் கூட்டமா அல்லது 5,000 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
