தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பாக இழுபறி நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களுடன், உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் மற்றும் “ஆட்சியில் பங்கு” என்ற அதிரடி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம்? அதிகாரம் இல்லாமல் எந்தக் கட்சியும் இருக்க விரும்பாது” எனச் சீறியதோடு, தவெக தலைவர் விஜய் தங்களுக்குத் திறந்தவெளி அழைப்பு விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி திமுக-விற்கு மறைமுக நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி மதில் மேல் பூனையாகத் தொடர்வது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், ராகுல் காந்தி மார்ச் 5-ஆம் தேதி காஞ்சிபுரம் கரசங்காலில் நடைபெறவுள்ள கிராமக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவுள்ள நிலையில், அவர் நடிகர் விஜய்யுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் கோட்டை வரை அதிரவைத்துள்ளன.

தவெக தலைவர் விஜய், காங்கிரஸை ஈர்க்கும் வகையில் 100 இடங்கள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதோடு, ஆட்சியில் பங்கு மற்றும் 5 முதல் 6 அமைச்சர் பதவிகளை வழங்கவும் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக-வை விட அதிக சலுகைகளை விஜய் வழங்க முன்வந்துள்ளதால், ராகுல் காந்தியின் இந்த வருகை தமிழகத்தின் கூட்டணிக் கணக்குகளையே தலைகீழாக மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் ராகுல் காந்தி மற்றும் விஜய் தரப்பிலிருந்து வெளியாகப்போகும் அந்த “மெகா அறிவிப்பு” என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்!