பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அதன் அதிரடி ஆட்டத்தை விட, களத்தில் வீரர்கள் செய்யும் நகைச்சுவையான ஃபீல்டிங் தவறுகளே பெரும்பாலும் பேசுபொருளாகும். அந்த வரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான சூப்பர்-8 ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் செய்த தவறு அந்த அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துள்ளது.

இங்கிலாந்து அணி 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது, ஆட்டத்தின் 4-வது ஓவரை சைம் அயூப் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் ‘ஸ்லாக் ஸ்வீப்’ செய்ய முயன்றார். ஆனால், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு உயரே எழும்பியது. விக்கெட் கீப்பர் அந்தப் பந்தைப் பிடிக்கத் தயாராக இருந்த நிலையில், இடையில் புகுந்த உஸ்மான் தாரிக், தானாக முன்வந்து கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்தை இரண்டு முறை கையில் தட்டிவிட்டு இறுதியில் கீழே போட்டு சொதப்பினார்.

ஏற்கனவே 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறிய நிலையில், இந்த விக்கெட் கிடைத்திருந்தால் அந்த அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும். இந்தத் தவறால் பந்துவீச்சாளர் சைம் அயூப் பெரும் அதிருப்தி அடைந்தார்.

தொடக்கத்திலேயே ஷாகீன் அப்ரிடி அதிரடியாகப் பந்துவீசி பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரை வீழ்த்தியிருந்தார். இருப்பினும், உஸ்மான் தாரிக் கொடுத்த அந்த ‘மறுவாழ்வை’ இங்கிலாந்து வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் உஸ்மான் தாரிக் 8-வது ஓவரில் டாம் பான்டனை வீழ்த்தி ஓரளவுக்குத் தனது தவறை ஈடுகட்டினார்.

 

முன்னதாக பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தாலும் சாஹிப்சாதா ஃபர்ஹானின் பொறுப்பான ஆட்டம் மற்றும் பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஷதாப் கான் ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவர்களில் 164 ரன்களைச் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி தனது முதல் சூப்பர்-8 ஆட்டத்தில் மழையினால் புள்ளிகளை இழந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தும், முக்கியமான தருணத்தில் கோட்டைவிட்ட கேட்ச் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க.