மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்குத் தேர்வு மையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10-ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தேர்வு தொடங்கி அமைதியாக நடைபெற்று வந்த நிலையில், சுமார் 10 மணியளவில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவிக்குத் திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

வலியால் துடித்த அந்த மாணவி கழிவறைக்குச் சென்றுள்ளார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அது சாதாரண வயிற்று வலி அல்ல, பிரசவ வலி என்பது தெரியவந்தது.

சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் அந்த மாணவிக்குத் தேர்வு மையத்திலேயே பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற்றது. அந்த மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிக்குக் கடந்த 2024 மே மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, இந்தூரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இதற்கிடையில் அந்த மாணவிக்கு வேறொரு இடத்தில திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க இந்தூர் காவல் நிலையத்திற்கு வழக்கைத் தரம் மாற்றியுள்ளனர். பொதுத்தேர்வு மையத்தில் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது.