மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இளம்பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு தனித்தனி எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் மற்றும் போபாலைச் சேர்ந்த 30 வயது பெண் ஆகிய இருவர் அளித்த புகாரில், இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களைக் குறிவைக்கும் இந்தக் கும்பல், அவர்களுக்கு வேலை மற்றும் நிதி உதவி வழங்குவதாக ஆசை காட்டித் தங்களது இடத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்களுக்குத் தங்களது ஆண் நண்பர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 30 வயதுப் பெண் கூறுகையில், “குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலை என 10,000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி என்னை அழைத்தனர். ஒருநாள் தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பல ஆண்களிடம் என்னைக் கட்டாயப்படுத்தி ஒப்படைத்தனர். மத நூல்களைப் படிக்கச் சொல்லி என்னைக் கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு புகார்தாரரான பியூட்டிஷியன் பெண், தன்னை பிறந்தநாள் விழாவில் சந்தித்த ஒரு தோழி மூலம் இந்தக் கும்பலிடம் சிக்கியதாகக் கூறியுள்ளார். தன்னை ஆபாசமான உடைகளை அணியச் சொல்லி வற்புறுத்தியதாகவும், முஸ்லிம் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு மதமாறச் சொல்லித் தொடர்ந்து மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் கும்பலின் தலைவி உட்பட மூன்று பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இக்கும்பலிடம் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.