2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் தீவிரமாக மோதி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பலமான மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகி வரும் விஜய், பூத் கமிட்டி அமைப்பது முதல் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது வரை தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா போன்ற முக்கியப் புள்ளிகள் விஜய் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், திண்டுக்கல் அரசியலில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகியும், திண்டுக்கல் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ஆர்.நடராஜன், தற்போது தவெகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 மனை தெலுங்கு செட்டியார் சமூக அமைப்பின் மாநிலத் தலைவராக இருக்கும் இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலமான செல்வாக்கு உள்ளது. சமீபத்தில் நடந்த இவரது சமூக அமைப்புக் கூட்டத்தில், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கப் பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தரப்பிலிருந்தும் இவருக்கு அழைப்பு வந்தாலும், விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
நடராஜன் தவெக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டால், அது அங்குள்ள அரசியல் கணக்குகளைப் புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அந்தத் தொகுதியில் அதிமுகவின் மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் களம் காண வாய்ப்புள்ள நிலையில், நடராஜனின் வருகை இவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும்.
திமுகவில் இருந்தவர் என்பதால் ஆளுங்கட்சி வாக்குகளையும், சமூக ரீதியாக அதிமுக வாக்குகளையும் இவர் பிரிப்பார் என்பதால், திண்டுக்கல் தேர்தல் களம் வரும் நாட்களில் இன்னும் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
