தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க இணைந்துள்ள சூழலில், சசிகலா தனது அடுத்தகட்ட அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட புதிய கொடியை அறிமுகம் செய்து, சசிகலா தனது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலாவின் இந்தத் தனிப்பாதை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய சசிகலா, அ.தி.மு.க-வின் வரலாறு மற்றும் தற்போதைய தலைமை குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்குப் புதிய கட்சி தொடங்கும் எண்ணமே இல்லை என்றும், அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்திருந்த கட்சியையே அவர் நடத்தினார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை (பெயரைக் குறிப்பிடாமல்) முதலமைச்சராக்கியது தாம்தான் என்றும், ஆனால் அவர் தன்னை சிறையில் இருந்தபோது பல வழிகளில் கொடுமைப்படுத்தியதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் யாரோ சொன்னதைக் கேட்டு ‘தர்மயுத்தம்’ நடத்தியது அவருக்குப் பாதிப்பாக அமைந்துவிட்டது என்று கூறிய சசிகலா, துரோகங்களை முறியடித்து இனி புதிய பயணத்தைத் தொடரப் போவதாகத் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.