தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தான் முதல்வராக அமர வைத்தவரே தனக்கு முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் கொடியைக் கூட பயன்படுத்தக் கூடாது என அவர்கள் தடுத்ததாக வேதனை தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக தலைமை சரியான வழியில் செல்லாததால் தொடர்ந்து 10 தேர்தல்களில் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் மீது தமக்கு எந்தக் குறையும் இல்லை என்றும், தற்போது ஒரு குறிப்பிட்ட கும்பல் அவருக்கு அதிக நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சசிகலா தெரிவித்தார்.
தான் எப்போதும் எம்.ஜி.ஆர் வழியில் கோபத்தைக் காட்டாமல் அமைதியாகவே இருப்பதாகவும், பெங்களூரு சிறையில் இருந்தபோது கூட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்ததாகவும் சசிகலா குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
