உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான பாடப் புத்தகங்களை, கல்வித்துறை ஊழியர்களே பழைய பேப்பர் கடைக்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஒரு அரசு ஊழியர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
2026-27 கல்வியாண்டுக்காக மாணவர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த புதிய பாடப் புத்தகங்களை, அடிப்படைக் கல்வி அதிகாரி (BSA) அலுவலக ஊழியர்கள் குப்பை வியாபாரி ஒருவருக்கு கிலோ 4 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அக்ஷய் குமார் திரிபாதி விசாரணைக் குழுவை அமைத்தார்.
बहराइच: 13 हजार+ सरकारी किताबें कबाड़ में बेचीं, 4 अरेस्ट
◆ बच्चों को मुफ्त बंटने वाली हजारों सरकारी किताबें कबाड़ी में बेच डालीं, बेसिक शिक्षा अधिकारी (BSA) दफ्तर का फोर्थ क्लास कर्मचारी आलोक मिश्रा, कबाड़ी दिलशाद, शुभांकर गुप्त, अर्जुन गिरफ्तार
◆ BSA दफ्तर के कर्मचारी… pic.twitter.com/5v0LVtbpmg
— News24 (@news24tvchannel) February 23, 2026
போலீஸார் நடத்திய சோதனையில், குப்பை வியாபாரியின் இடத்திலிருந்து சுமார் 13,000 புத்தகங்கள் மீட்கப்பட்டன. இந்த புத்தகங்கள் ஒரு கன்டெய்னர் லாரி மூலம் உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூருக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. லக்கிம்பூர் கேரி பகுதியில் வைத்து அந்த லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், புத்தகங்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சில புத்தகப் பக்கங்கள் பக்கோடா கடைகளில் எண்ணெய் வடிக்கப் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக கல்வித்துறையின் நான்காம் வகுப்பு ஊழியர் அலோக் மிஸ்ரா மற்றும் பழைய பேப்பர் வியாபாரிகளான தில்ஷாத், சுபாங்கர் குப்தா, அர்ஜுன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அலுவலக ஊழியர்கள் அசுதோஷ் சிங், தீபக் குமார் மற்றும் அதுல் சிங் ஆகியோர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். உதவியாளர்கள் அலோக் குமார் மற்றும் ஷபிக் அகமது ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பயிற்றுவிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் ஆகியோரின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், தொகுதி கல்வி அதிகாரி (BEO) டோலி மிஸ்ரா மற்றும் கணக்கு அதிகாரி வீரேஷ் வர்மா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
