ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் (விமான ஆம்புலன்ஸ்), சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (பிப். 23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 23 நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பை இழந்து மாயமானது. சத்ராவின் சிமாரியா அருகே உள்ள கர்மடண்ட் கிராமக் காட்டுப்பகுதியில் விழுந்து தீப்பிடித்ததில், விமானத்தில் இருந்த நோயாளி, மருத்துவர், விமானிகள் உட்பட 7 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த சத்தத்துடன் விமானம் விழுந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில், விடிய விடிய நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் டாக்டர் விகாஸ் குமார் குப்தா மற்றும் நோயாளி அர்ச்சனா தேவி ஆகியோரும் அடங்குவர். மோசமான வானிலை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.