சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள்? ஏன் அவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது? போன்ற கேள்விகள் நம் எல்லோரிடமும் இருக்கும். இதையே பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நோமன் கான் ஒரு சிக்னலில் பிச்சை எடுத்த பெண்களிடம் கேட்டார். “மாதம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன், வருகிறீர்களா?” என்று அவர் கேட்டபோது, அந்தப் பெண்களோ “பெரியவர்களிடம் கேட்க வேண்டும்” என்று மழுப்பியதுடன், “வீடுகளில் வேலை செய்தால் திருட்டுப் பட்டம் கட்டுவார்கள், அதனால்தான் பிச்சை எடுக்கிறோம்” என்று விசித்திரமான காரணத்தைக் கூறினர்.
மற்றொரு சிக்னலில் பிச்சை எடுப்பவரிடம் இதே கேள்வியைக் கேட்டு 10 ரூபாயை இயக்குனர் நோமன் கான் நீட்டியபோது, “உன் 10 ரூபாய்க்கு ஒரு கோடி சாபம் (லான்ட்)” என்று அவர் திட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2025-26 காலப்பகுதியில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக சவுதியிலிருந்து மட்டும் 24,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
