2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், தற்போதுள்ள 58 சதவீத அகவிலைப்படி மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 60 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான இந்த உயர்வு மார்ச் மாதத்தில்தான் மத்திய அமைச்சரவையால் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை மார்ச் தொடக்கத்திலேயே வருவதால், பண்டிகைக்கு முன்பே அறிவிப்பு வருமா அல்லது கடந்த ஆண்டுகளைப் போல மார்ச் இறுதியில் வெளியாகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.கடந்த கால நடைமுறைகளைப் பார்க்கும்போது, 2024-ல் மட்டுமே ஹோலிக்கு முன் அறிவிப்பு வெளியானது; மற்ற ஆண்டுகளில் பண்டிகை முடிந்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
எனவே, இந்த ஆண்டும் மார்ச் மாத இறுதியில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஊழியர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் இந்த உயர்வு வழங்கப்படும்.
பணவீக்கத்தின் சுமையைக் குறைக்க உதவும் இந்த 60 சதவீத உயர்வுக்காக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
