சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன். இவரது மகள் விஷ்ணு பிரியா, சூர்யா நடித்த ‘மாயாவி’ படத்தின் மூலம் பிரபலமானவர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொடைக்கானலில் உள்ள தங்களது சொந்த பங்களாவில் தங்கியிருந்தபோது, கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தந்தை சூர்ய நாராயணன் கடுமையாக எதிர்த்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிரைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சூர்ய நாராயணன், கொடைக்கானல் பங்களாவிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், வேலைக்காரர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து உடல் முழுவதும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி மூச்சுத்திணறடித்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்களை அழித்துவிட்டு தப்பியோடிய அந்த மர்ம கும்பலைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். டிரைவர் கொலைக்கு பழிவாங்க இந்தத் தாக்குதல் நடந்ததா அல்லது கொள்ளை முயற்சியில் உயிர் போனதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
