கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பேக தல்லி கிராமத்தைச் சேர்ந்த மனு என்ற வாலிபர், தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான மனுவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தனது மனைவிக்கு இருந்த கள்ளத்தொடர்பை கண்டித்த மனு, அவரை நல்வழிப்படுத்த முயன்றார். இருப்பினும், கணவனின் பேச்சை பொருட்படுத்தாத மனைவி, சில நாட்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுடன் வீட்டிற்குத் தெரியாமல் சென்றுவிட்டார்.

இதனால் தனது மனைவியை நேரில் சந்தித்து மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மனு பலமுறை அழைத்தும், அவர் வர மறுத்து கள்ளக்காதலனுடனேயே இருக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மனு, வாழ்க்கையில் விரக்தியடைந்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மகனின் மரணத்திற்கு மருமகளின் தவறான உறவே காரணம் என்று மனுவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.