அதிமுகவில் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட செங்கோட்டையன், தவெக கட்சியில் இணைந்த பிறகும் தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பொது இடங்களிலும் சரி, கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, அந்தப் புகைப் படத்துடனேயே வலம் வந்த அவர், “எப்போதும் நான் அம்மாவின் விசுவாசிதான், அவரே எனது வழிகாட்டி” என்று விமர்சனங்களுக்கு வெளிப்படையாகப் பதிலளித்து வந்தார். இது தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்து வந்தார்.

​ஆனால், இப்போது முதல்முறையாக செங்கோட்டையன் தனது முடிவை மாற்றிக் கொண்டு அதிரடி காட்டியுள்ளார். நீண்ட காலமாகத் தனது இதயத்திற்கு நெருக்கமான பாக்கெட்டில் வைத்திருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்துவிட்டு, தற்போது தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே தீவிர விசுவாசத்தை இப்போது விஜய்க்கும் காட்டத் தொடங்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.