டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் இந்திய அணியின் கனவுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சூப்பர்-8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, ஒருகட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால், மிடில் ஆர்டரில் களம் புகுந்த டேவிட் மில்லர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதிரடியாக விளையாடிய அவர் 35 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) குவித்தார். அவருக்குத் துணையாக டெவால்ட் பிரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் நடுவே இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கும், டேவிட் மில்லருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது பந்து வீசுவதற்கு முன்னரே மில்லர் கிரீஸை விட்டு வெளியேறியதாகசுந்தர் நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மில்லர், சுந்தரிடம் ஆக்ரோஷமாகப் பேசினார். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து நடுவர் கிறிஸ் காபனே மற்றும் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
Heated Words Exchanged Between Miller And Washington Sundar 🌶️
Both are usually the calmest on the field, but this time even they couldn’t keep their cool 🔥
— CricketSanctum (@SanctumCricket) February 22, 2026
188 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபார்மில் இருந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இந்தியா 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்த 76 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வி, இந்தியாவின் ‘நெட் ரன்-ரேட்’டை வெகுவாகப் பாதித்துள்ளது. குரூப்-1 பிரிவில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா தனது அடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
