மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கருமுட்டை மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பெண்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒருமுறை கருமுட்டை தானம் செய்த பெண்களையே, பண ஆசை காட்டி மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளனர். முட்டை உற்பத்தியை அதிகரிக்கப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக வீரியம் கொண்ட ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டதால், அவர்களின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முறைக்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கருமுட்டைகளை ஐவிஎஃப் (IVF) மையங்களுக்கு லட்சக்கணக்கில் இந்த கும்பல் விற்றுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தச் சதிவலையில் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்களின் பெயர்களும் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
