நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தனுக்கும் திவ்யாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்தது.

இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருவதாக இருந்தது, ஆனால் திருமண மண்டபம் சிறியதாக இருந்ததால் பாதுகாப்பு மற்றும் இடவசதி கருதி, முதல்வரை வரவழைக்காமல் பிறகு நேரில் சென்று ஆசி பெற்றுக்கொள்ளலாம் என ராஜ் முடிவு செய்துள்ளார்.

ஒரு சாதாரண நடிகனின் வீட்டு விசேஷத்திற்கு முதல்வர் வருவதாக சொன்னதே தனக்கு வாழ்நாள் சாதனை என நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிடுகிறார்.தன் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் ராஜ், ஏற்கனவே தன் மகளுக்கும் காதல் திருமணம் செய்து வைத்ததை நினைவுகூர்ந்தார். தன் வசதிக்கேற்ப கடன் வாங்காமல், சிக்கனமாக இந்த திருமணத்தை நடத்தியது தமக்கு திருப்தி அளிப்பதாக அவர் கூறுகிறார்.

சாதி, மத பேதமின்றி தன் மகன் விரும்பிய பெண்ணையே மணமுடித்து வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், விரைவில் புதுமணத் தம்பதியினரை அழைத்துச் சென்று முதலமைச்சரை சந்தித்து ஆசி பெறப்போவதாகவும் ராஜ் தெரிவித்துள்ளார்.