தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மருத்துவமனையில் வழங்கப்பட்ட காலாவதியான மருந்துகளை உட்கொண்ட 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அஜாக்கிரதையே இதற்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹைதராபாத் பன்ட்லகுடா ஜாகீர் – சன் சிட்டி பகுதியைச் சேர்ந்த ராமு என்ற 6 மாதக் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சில மருந்துகளை வழங்கியுள்ளனர்.

மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பதற்றமடைந்த பெற்றோர்கள் மீண்டும் மருத்துவர்களை அணுகியபோது, சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து பாட்டில்களைச் சோதித்தபோது, அவை காலாவதியானவை என்பது தெரியவந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே தங்களது குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் மருத்துவமனை முன் திரண்ட உறவினர்களும் பொதுமக்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“மருத்துவர்களின் இந்த மன்னிக்க முடியாத அஜாக்கிரதை குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தனியார் மருத்துவமனைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.