நவீன தொழில்நுட்பமும் பாரம்பரியமும் கைகோர்த்தால் எப்படி இருக்கும்? அதற்குச் சான்றாக ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் குதிரையில் சென்று ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் உணவு முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் செயலிகள் மூலம் ஆர்டர் செய்யப்படுகின்றன. வழக்கமாக டெலிவரி ஊழியர்கள் பைக் அல்லது ஸ்கூட்டர்களில் மின்னல் வேகத்தில் செல்வதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த முதியவர் ஒருவர், முதுகில் ‘பிளிங்கிட்’ (Blinkit) நிறுவனத்தின் மஞ்சள் நிறப் பையை மாட்டிக்கொண்டு, கம்பீரமாகக் குதிரையில் சவாரி செய்தபடி டெலிவரிக்குச் செல்லும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுமார் 11 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், அந்த முதியவர் மிகவும் நம்பிக்கையுடன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நிதானமாகச் செல்கிறார். சாலையில் சென்ற ஒருவர் இதனைத் தனது கைப்பேசியில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், “இது ராஜஸ்தான் பிரதான்! இங்கு இளைஞர்களுக்குக் குதிரை சவாரி செய்யத் தெரியவில்லை, ஆனால் பெரியவர்கள் குதிரையிலேயே ஆன்லைன் டெலிவரி செய்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இதுவரை 21,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இதுதான் உண்மையான ராஜஸ்தான் ராயல் டெலிவரி” என்று ஒரு பயனர் புகழாரம் சூட்டியுள்ளார். “பெட்ரோல் விலை உயர்வால் மாமா எடுத்த புத்திசாலித்தனமான முடிவு இது” என மற்றொருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். “குதிரைக்கான தீவனச் செலவை இந்த வருமானம் ஈடுகட்டுமா?” என்று சிலர் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் உலகை மாற்றினாலும், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்றும் பாரம்பரிய முறைகள் தங்களின் தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.