திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசிய ஆத்திரத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். பையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற கார் டிரைவர், தனது முதல் மனைவி ஆஷாவுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த கவிதா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் கவிதா அடிக்கடி செல்போனில் வேறொருவருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை வினோத்குமார் பலமுறை கண்டித்தும் கவிதா கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு கவிதா மீண்டும் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட வினோத்குமார், கடும் ஆத்திரமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் தாங்காமல் கவிதாவின் முகத்தில் பலமாகக் குத்தியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதி கொடூரமாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த கவிதா மயங்கி விழவே, பயந்துபோன வினோத்குமார் அவரை மருத்துவமனையில் விபத்து என்று கூறி சேர்த்தார்.
எனினும் கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவிதாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரணி போலீசார், தலைமறைவாக இருந்த வினோத்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
