அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணி தான் அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பும் கண்காணிப்பும் இருப்பதால், அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்றும், அந்த அழுத்தத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று முறை டக்-அவுட் ஆனாலும், அவரைத் தங்கள் அணி குறைத்து மதிப்பிடாது என்று கான்ராட் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்றிருந்தாலும், உலகக்கோப்பை என்பது முற்றிலும் மாறுபட்டது என அவர் எச்சரித்துள்ளார்.

கேசவ் மகாராஜ், மார்க்ரம் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களையும், ஃபார்மில் இருக்கும் டிகாக், ஸ்டப்ஸ் போன்ற பேட்ஸ்மேன்களையும் கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, அகமதாபாத் ஆடுகளத்தில் இந்தியாவிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.