தி.மு.க. கூட்டணி ஏற்கனவே மிகவும் வலுவாக இருப்பதாகவும், தே.மு.தி.க.வின் வருகையால் அந்த பலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க அணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக வரும் 22-ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும், கூட்டணித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்காமல் சுமூகமான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய துரை வைகோ, விஜய்க்குப் பின்னால் இளைஞர் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது என்றும், அவர் சுமார் 15 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இருப்பினும், மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்கள் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து விஜய் மௌனம் காப்பதாக அவர் விமர்சித்தார்.

தற்போதைய சூழலில் விஜய்யின் அரசியல் வருகை தி.மு.க கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்றும், தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தி.மு.க பக்கமே இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.