உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள போக்சோ நீதிமன்றம், நீர்ப்பாசனத் துறையின் முன்னாள் இளநிலைப் பொறியாளர் ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில், 3 வயது முதல் 33 சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் அது தொடர்பான ஆபாசப் படங்களை எடுத்தது போன்ற கொடூரமான குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை “அரிதிலும் அரிதானது” என்று வர்ணித்த நீதிமன்றம், குற்றவாளிகளின் செயல்கள் மன்னிக்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட 33 சிறுவர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை அனைத்துப் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்தத் தம்பதியினர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.