தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் அடையாளத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க ஒரு அதிரடித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் ‘விசில்’ வடிவிலான கீ-செயின்களை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சினிமாவில் மாஸ் ஹீரோவாக விசில் சத்தங்களுக்கு இடையே அறிமுகமாகும் விஜய், இப்போது அதே பாணியை அரசியலிலும் கையில் எடுத்துள்ளார். கட்சியின் சின்னம் அல்லது பெயரைத் தாங்கிய இந்த விசில்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பதே தவெக-வின் முக்கிய நோக்கமாகும்.

வெறுமனே ஒரு பொருளைக் கொடுப்பதாக இல்லாமல், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாவிக் கொத்தில் கட்சியின் அடையாளம் இருக்க வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது.

மக்கள் வண்டியை எடுக்கும் போதும், வீட்டைத் திறக்கும் போதும் தவெக-வின் நினைவு அவர்களுக்கு வர வேண்டும் என்ற மார்க்கெட்டிங் தந்திரம் இதில் ஒளிந்துள்ளது.

இதற்காகத் தொண்டர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, இந்த அன்புப் பரிசை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் விளம்பரத்தைப் போல, மிக நேர்த்தியாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

சினிமாவில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களைக் கவர்ந்த விஜய், இப்போது அரசியலில் ஒரு ‘மாஸ் ஸ்டோரி’ எழுதத் தொடங்கிவிட்டார்.

தொகுதிக்கு ஒரு லட்சம் விசில்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு தந்திரமான நகர்வு. இந்தத் திட்டம் மற்ற அரசியல் கட்சிகளையும் உற்று நோக்க வைத்துள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தவெக-வின் விசில் சத்தம் பலமாக ஒலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.